நாகையில், சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி

நாகையில், சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி

Update: 2023-03-22 18:45 GMT

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாகையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குளங்களில் சிறுவர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.

சுட்டெரிக்கும் வெயில்

நாகை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் அக்னி நட்சத்திர காலங்களில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். பருவ கால மாற்றத்தின் காரணமாக நாகையில் அவ்வப்போது மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக இருந்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரத்தை போல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அனல் காற்று, கானல் நீர்

மதியம் நேரத்தில் அடிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியில் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் தென்படுகிறது. நாகையில் வழக்கத்தை விட நேற்று காலை 9 மணி முதலே வாட்டி வதைக்க தொடங்கிய வெயிலினால், நாகை நகர் பகுதிகளில் அனல் காற்று வீசியது. கோடை காலத்தை போல சாலையில் கானல் நீர் தோன்றியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

கட்டிட தொழிலாளர்கள் அவதி

பெரும்பாலானோர் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து வெளியில் செல்லாமலேயே இருந்தனர். சுட்டெரித்த வெயிலால் கட்டிட தொழிலாளர்கள் திறந்தவெளியில் வேலை செய்ய முடியாமல் அவதியடைந்தனர்.

நாகை நகர் பகுதிகளில் வெயிலிலிருந்து தங்களை தற்காத்துகொள்ள பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி பருகினர். இதனால் குளிர்பானங்களின் விற்பனையும் சூடு பிடித்தது.

ஆனந்த குளியல்

சுட்டெரிக்கும் வெயிலினால் சிறுவர்கள் நாகை தாமரை குளத்தில் ஆனந்த குளியல் போட்டனர். அதேபோல நேற்று அரசு விடுமுறை என்பதால் நகர் பகுதிகளில் உள்ள குளங்களில் குளித்து சிறுவர்கள் கும்மாளம் போட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்