கரூர் மாவட்டத்தில் பிளஸ்-௨ பொதுத்தேர்வில் 92.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-௨ பொதுத்தேர்வில் 92.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2022-06-20 19:38 GMT

பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. இதனையடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்விற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 112 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 834 மாணவர்களும், 5 ஆயிரத்து 411 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 245 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். நேற்று வெளியான தேர்வின் முடிவுகளின் படி கரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 305 மாணவர்களும், 5 ஆயிரத்து 158 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 463 பேர் தேர்ச்சி பெற்றனர்.

92.37 சதவீதம்

மாவட்டத்தில் 92.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த மார்ச் 2020-ம் ஆண்டை விட 2.14 சதவீதம் குறைவாகும். மாணவர்கள் 89.06 சதவீதமும், மாணவிகள் 95.32 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 86.54 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 97.07 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.75 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கரூர் மாவட்டம் 27-வது இடம் பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி உள்பட 21 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

செல்போனில் குறுஞ்செய்தி

மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள், அவர்களின் பெற்றோர் செல்போனில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு வந்தது.இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்களது பெற்றோர் செல்போன் மூலம் வீட்டில் இருந்து அறிந்து கொண்டனர். மேலும் மாணவ-மாணவிகள் சிலர் தாங்கள் பயிலும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களின் செல்போன்கள் மூலம் பிளஸ்-2 தேர்வு முடிவுக்கான இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

நூலகத்தில் சிறப்பு ஏற்பாடு

மேலும் மாணவர்கள் தங்களது பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக கரூர் மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மாணவர்கள் அங்கு வந்து இணையதளம் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்