காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்கள் பறிப்பு - கலெக்டர் நடவடிக்கை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்களை பறித்து கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2023-04-05 09:05 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக கோபிநாதன் பதவி வகித்து வந்தார். துணைத்தலைவராக ஆறுமுகம் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வார்டு உறுப்பினர்கள் 5 பேரும் ஊராட்சி தலைவர் கோபி, துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.

இதன் மீது விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு மாத்தூர் ஊராட்சியின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கம் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் பொதுமக்களின் நலன் கருதியும் நிர்வாக காரணங்களுக்காகவும் மறு உத்தரவு வரும் வரை ஊராட்சி மன்ற தலைவர் கோபி, துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வேண்டா சுந்தரமூர்த்தி. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வேண்டா சுந்தரமூர்த்தியையும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அவரிடமிருந்த அனைத்து அதிகாரங்களையும் பறித்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சோமசுந்தரத்திடம் ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்