அரசு பள்ளிக்கூடங்களில்ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்பரிசு கொடுத்து வாழ்த்து பெற்ற மாணவ-மாணவிகள்

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தின விழாவில் மாணவ-மாணவிகள் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

Update: 2023-09-05 21:59 GMT

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தின விழாவில் மாணவ-மாணவிகள் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

ஆசிரியர் தின விழா

இந்தியாவின் 2-வது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமையில் ஆசிரியர் தின விழா நடந்தது. ஆசிரிய- ஆசிரியைகள் கேக் வெட்டினார்கள். மாணவ- மாணவிகள் ஆசிரியைகளுக்கு பூக்கள், பரிசுகள் வழங்கி ஆசி பெற்றனர். பல்வேறு போட்டிகள் நடத்தி உற்சாகப்படுத்தினார்கள். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

கண்ணன்- ராதை வேடம்

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு ஆசிரியைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமை தாங்கினார். தி.மு.க. வார்டு செயலாளர் திருநாவுக்கரசு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு பரிசுகள் வழங்கி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியைகள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவ- மாணவிகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூட மாணவிகள் தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியைகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கான கிருஷ்ண ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட்டது. சிறுவர்- சிறுமிகள் கண்ணன்- ராதை வேடம் அணிந்து அனைவரையும் மகிழ்வித்தனர். மேலும் மாணவ- மாணவிகள் தங்கள் வகுப்பு ஆசிரியைகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு இனிப்பு, பரிசு பொருட்கள் கொடுத்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தனர்.

கேக் வெட்டினர்

ஈரோடு திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை அருணாதேவி தலைமையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரிய- ஆசிரியைகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மாணவ- மாணவிகளின் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதுபோல் ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்