அரசு நடுநிலைப்பள்ளிகளில்8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படுமா?பெற்றோர் எதிர்பார்ப்பு

அரசு நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-03-29 21:53 GMT

அரசு நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

காலை சிற்றுண்டி

தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பு ஏற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளின் பசியை போக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். முதல் கட்டமாக அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு, மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தினசரி பொங்கல், உப்புமா, சேமியா என்று காய்கறிகள் கலந்த சிற்றுண்டி சாப்பிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசு நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நேற்று ஈரோடு மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் இந்த சிறந்த திட்டம் அமலுக்கு வந்தது. இது மகிழ்ச்சியானதாக இருந்தாலும், வேதனையான சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பெற்றோர் மகிழ்ச்சி

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:-

எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் காலை உணவு வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது. கூலி வேலை செய்யும் பெற்றோர் குழந்தைகளின் உணவு மற்றும் இதர செலவுகளை சமாளிப்பது சிரமம்.

பல பெற்றோர்கள் காலை நேரத்திலேயே வேலைக்கு சென்று விடுவதால் நிறைய குழந்தைகள் காலை சாப்பாடு சாப்பிட முடியாமல் பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள். மதிய உணவு வரை அவர்கள் பசியில் இருப்பார்கள். இனிஅந்த கவலை இல்லை.

கோரிக்கை

அதே நேரம், இந்த திட்டம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை மட்டுமே உள்ளது. இதே பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களிலும் பசியுடன் வகுப்புகளுக்கு வருகிறவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு அளவில் 6-ம் வகுப்புக்கு மேல் இருக்கிறார்கள் என்றாலும், வயது அளவில் அவர்களும் குழந்தைகள்தான்.

5-ம் வகுப்புவரை மட்டும் உணவு என்றால், மற்ற குழந்தைகள் மிகவும் வாடிப்போய்விடுவார்கள். சாப்பாடு போடும் இடத்தில் உங்களுக்கு உணவு இல்லை என்று கூறுவது பெரியவர்களாலேயே தாங்கமுடியாத அவமானமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழல் குழந்தைகள் மனதில் ஏற்பட்டு விடாமல் இருக்க வேண்டும். எனவே அனைத்து அரசு, மாநகராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களிலும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு என்று திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்கள் சார்பில் கோரிக்கையாக வைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வேதனை

இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "ஒரே பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் காலை உணவு வழங்க முடியாதது வருத்தமாக உள்ளது. தொடக்கப்பள்ளி என்றால் அங்கு 5-ம் வகுப்புவரை மட்டுமே குழந்தைகள் இருப்பார்கள். ஆனால் நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்புவரை படிக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்து அண்ணன் -தங்கை, அக்கா-தம்பி என்று வந்து படிக்கிறார்கள். தனியாக இருக்கும் குழந்தைகளும் வருகிறார்கள். அதில் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களுக்கு உணவு இல்லை என்று எங்கள் குழந்தைகளை பார்த்து நாங்களே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது எங்கள் மனதை மிகவும் பாதிக்கிறது. சிறு குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடும்போது அவர்களில் எத்தனைபேர் பசியோடு வருகிறார்கள் என்பது தெரிகிறது. அதே வீட்டில் இருந்து வரும் 6-ம் வகுப்புக்கு மேற்பட்ட குழந்தைகளும் சாப்பிடாமல்தானே வருவார்கள். அவர்களுக்கு உணவு இல்லை என்று எப்படி சொல்வது. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சிற்றுண்டி தரப்படுவதால் நாங்கள் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்க முடிவதில்லை. ஆனால் காலை உணவு சாப்பிடும் குழந்தைகளை பார்த்துக்கொண்டு மற்ற குழந்தைகள் செல்வதை பார்க்கும்போது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எனவே நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்புவரை காலை சிற்றுண்டி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்