ஈரோடு மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 8 இடங்களில் சாலை மறியல்; 140 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் மற்றும் டயர் எரிப்பு போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-22 21:37 GMT

ஈரோடு மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் மற்றும் டயர் எரிப்பு போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல் போராட்டம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்க இயக்குனரகம், தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தியது. இதில் கோவை மாவட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் உள்பட நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் என்.ஐ.ஏ. மூலம் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசன் அலி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

140 பேர் கைது

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். நடுரோட்டில் பெண்கள் டயரை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதேபோல், ஈரோட்டில் மூலப்பாளையம் நால் ரோடு சந்திப்பு, கருங்கல்பாளையம், பி.பி.அக்ரஹாரம் ஆகிய இடங்களிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உட்பட பல்வேறு அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் கோபி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 8 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 41 பெண்கள் உள்பட மொத்தம் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்