ஈரோடு மாவட்டத்தில்2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க எதிர்ப்புகலெக்டரிடம், முன்னாள் அமைச்சர்கள் மனு
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம், முன்னாள் அமைச்சர்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம், முன்னாள் அமைச்சர்கள் மனு கொடுத்தனர்.
சுங்கச்சாவடி
ஈரோடு மாவட்டத்தில் கோபி அருகே உள்ள பாலப்பாளையம் பகுதியிலும், பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டிலும் தமிழக அரசு சார்பில் சுங்கச்சாவடி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்கச்சாவடிகள் அமைப்பதை கைவிட வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவை, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம், பண்ணாரி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் மனோகரன், பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலெக்டரிடம் வழங்கினர்.
பொதுமக்கள் பாதிப்பு
அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் இருந்து கோபி செல்லும் சாலை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தக்கூடியது. வணிக மையங்களும், வியாபார தளங்களும் பெரிய அளவில் உள்ளன.
எனவே விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்துகின்ற இந்த ரோட்டில் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என்று 15 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஈரோடு-கோபி சாலையிலும், பவானி-மேட்டூர் சாலையிலும் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
காட்டுப்பன்றி
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு முதல் மேட்டூர் வரை 4 வழிச்சாலை அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதனை நிறுத்திவிட்டு, 2 மீட்டர் மட்டுமே அகலப்படுத்தி அந்த சாலை விரிவுப்படுத்துகிற திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அங்கு 4 வழிச்சாலை உருவாக்கப்பட்டால் தான் கனரக வாகனங்கள் வரும்போது விபத்துகள் இல்லாமல் செல்ல முடியும். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
மழைவாழ் மக்கள் காட்டுப்பன்றிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கேரளா அரசை போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினோம். காலிங்கராயனில் 1.5 டி.எம்.சி. தண்ணீர் வந்தவுடன் அந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறி உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.