கடனுக்காக குழந்தையை விற்ற வழக்கில்விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

கடனுக்காக குழந்தையை விற்ற வழக்கில் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-06 02:06 GMT


கடனுக்காக குழந்தையை விற்ற வழக்கில் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடனுக்காக விற்பனை

மதுரையை சேர்ந்த ராஜாத்தி நாகமணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், குருவம்மாள் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். கடனை முறையாக திருப்பித் தர முடியவில்லை. இதற்காக கடனாக திரும்ப செலுத்த வேண்டிய தொகையுடன், கூடுதல் பணம் தருவதாக கூறி எனது குழந்தையை எழுதி வாங்கி கொண்டனர். இதை பதிவு செய்துள்ளனர். எனது குழந்தையை கட்டாயப்படுத்தி என்னிடம் இருந்து வாங்கி சென்றனர்.

எனவே, அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், நிர்மல் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வாங்கிய கடனுக்கான தொகையுடன் கூடுதல் பணத்தை பெற்று கொண்டு விரும்பித்தான் குழந்தையை விற்றுள்ளார். இதற்கான கண்காணிப்பு ேகமரா காட்சிகள் உள்ளன.

விசாரணை அறிக்கை

பணத்திற்காக சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக மனுதாரர், அவரது கணவர் பாலமுருகன், குருவம்மாள், காளீஸ்வரி, சாந்தி முருகன், விஜயலட்சமி ஆகியோர் மீது. அப்பன்திருப்பதி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்காணிப்பில் தொடர் விசாரணை நடந்து வருகிறது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்