போலி சான்றிதழ் தயாரித்த வழக்கில் 10ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பள்ளி ஆசிரியர் சிக்கினார்
விளாத்திகுளம் அருகே போலி சான்றிதழ் தயாரித்த வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே போலி சான்றிதழ் தயார் செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி ஆசிரியர்
கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 61). இவர் நாகலாபுரம் அருகே என். வேடப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் கடந்த 12.6.2008 அன்று ஓய்வூதியம் பெறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளார். ஆனால் சண்முகவேல் கோவில்பட்டியில் உள்ள வங்கியில் ரூ.ஒரு லட்சம் கடனாக பெற்றிருந்ததால், அவருக்கு தடையில்லா சான்றிதழை பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை.
போலி சான்றிதழ்
இதனால் ஆசிரியர்களான சண்முகவேல் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் அப்போதைய உதவி தொடக்கக் கல்வி அலுவலரான லட்சுமி என்பவரது கையொப்பமிட்டு போலியான தடையில்லா சான்றிதழ் தயார் செய்து, அதனை ஓய்வூதியம் பெறுவதற்கு பயன்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் செயலாளர் சீனிவாசகம் என்பவர் அளித்த புகாரின் பேரில் சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகவேல், பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சண்முகவேல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஆசிரியர் பாஸ்கர் கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
அதிரடி கைது
இதனையடுத்து தலைமறைவாக இருந்து வரும் ஆசிரியர் பாஸ்கரை கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெட்ரிக்ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசா் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை அதிரடியாக கைது செய்தனர்.