ஆவடியில் ஒரே நாள் இரவில் 6 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
ஆவடியில் ஒரே நாள் இரவில் வணிக வளாகத்தில் உள்ள அடுத்தடுத்து 6 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசந்தம் நகரில் தனியார் வணிக வளாகத்தின் முதல் மாடியில் 6-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் போட்டோ ஸ்டூடியோ, சலூன் கடை, துணிக்கடை, பல் கிளினிக், அழகுநிலையம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
நேற்று காலை ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரான ஆவடியை சேர்ந்த நாகராஜன், கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
அதேபோல் அருகில் உள்ள மேலும் 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் நூர்ஜகான் என்பவரது துணிக்கடையில் இருந்து ரூ.5 ஆயிரத்தையும், சிவசங்கரன் என்பவரது சலூன் கடையில் ரூ.10 ஆயிரத்தையும், பிரதீப் குமார் என்பவரது போட்டோ ஸ்டூடியோவில் விலை உயர்ந்த கேமரா மற்றும் ரூ.3 ஆயிரத்து 500-ஐயும், பிரவீன் குமார் என்பவரது பல் கிளினிக்கில் லேப்டாப் மற்றும் ரூ.3 ஆயிரத்து 500-ஐயும் திருடிச்சென்றனர்.
சந்திரா ஆனந்தி என்பவரது அழகு நிலையத்தில் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஒரே நாள் இரவில் வணிக வளாகத்தில் உள்ள அடுத்தடுத்து 6 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் மடிக்கணினிகள், விலை உயர்ந்த கேமரா ஆகியவற்றை திருடிச்சென்ற மர்மநபர்களை ஆவடி போலீசார் தேடி வருகின்றனர்.