வாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகள் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை அகற்றாவிட்டால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில், தாங்களே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என மனுதாரர் கூறியுள்ளதை அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதனால் கடும் கோபமடைந்த நீதிபதிகள், 'மிரட்டும் தொனியில் மனு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்ததோடு, 'மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் அரசு விதிமுறைகளின்படி அந்த வாகனத்தின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும், வேறு எந்த வகையிலும் எழுத்தோ, தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெறக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை அகற்ற வேண்டும் எனவும், அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.