ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-08-24 17:56 GMT

சென்னை,

போட்டித் தேர்வு எழுதியவர்களின் மன உளைச்சலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் பின் 7 மாதங்கள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அந்தத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியத்தால் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் அக்டோபர் 14-ஆம் நாள் வரை பெறப்பட்ட நிலையில், அடுத்த இரண்டரை மாதங்களில் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவாறு தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வாணையம் வெளியிட்ட கால அட்டவணைப்படி ஜனவரி மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் மார்ச் மாதத்தில் முடிவடைந்து, ஏப்ரல் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆணையம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைந்து 6 மாதங்கள் ஆகியும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

சார்நிலை புள்ளியியல் பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். கடந்த ஆண்டே பட்டப்படிப்பை முடித்த பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள், முதுநிலை பட்டப்படிப்பில் கூட சேராமல், மிகுந்த நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் இந்த போட்டித் தேர்வில் பங்கேற்றனர். ஏப்ரல் மாதத்துடன் தேர்வு நடைமுறைகள் முடிவடைந்து விடும் என்பதால், முடிவுகளைத் தெரிந்து கொண்டு நடப்பாண்டு பட்ட மேற்படிப்பில் சேர அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதுவரை தேர்வு முடிவுகள் வராத நிலையில், இந்த ஆண்டும் பட்டமேற்படிப்பில் சேரும் வாய்ப்பை அவர்கள் இழந்து விட்டனர். போட்டித் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதும் தெரியவில்லை.

போட்டித் தேர்வு எழுதியவர்களின் மன உளைச்சலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணையை உறுதியாக பின்பற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்