திடீரென இமானுவேல் சேகரன் சிலை வைத்ததால் பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திடீரென இமானுவேல் சேகரன் சிலை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-10 19:14 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் அமைச்சியார்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் மார்பளவு சிலை இருந்தது. இந்தநிலையில் அந்த சிலையை அகற்றி விட்டு முழு உருவச்சிலை திடீரென வைக்கப்பட்டது.

இந்த சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் மம்சாபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.

இதற்கிடையே சிலையை மூடக்கூடாது என அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்று (ஞாயிற்றுக்கிழமை) இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு, அங்கு காலை 10 மணிவரை பொங்கல் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்படும். பின்னர் சிலை மூடப்படும். முறையாக அனுமதி பெற்றவுடன் தொடர்ந்து சிலை திறந்து இருக்கும் என அதிகாரிகள் கூறினர். அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்