சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

சென்னை ஐ.ஐ.டி.யில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்குவதற்கு முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

Update: 2024-01-30 18:00 GMT

சென்னை,

முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்த சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இவர் 1974-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவர் ஆவார்.

இந்த அளவுக்கு நன்கொடை ஒரே தடவையாக சென்னை ஐ.ஐ.டி.க்கு இதுவரை யாரும் வழங்கியது இல்லை. அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் இதனை பெரிய பரிசாக கருதுகிறது. அதன்படி, இந்த ரூ.110 கோடியை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடியிடம், சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரும், வத்வானி தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளி தலைவரும், அமெரிக்காவின் ''ஐகேட்'' கேபிடல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சுனில் வத்வானி ரூ.110 கோடி நன்கொடை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கொடுத்தார்.

இதுகுறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறும்போது, 'நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.110 கோடி, சென்னை ஐ.ஐ.டி.யின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்காக மட்டும் செலவிடப்பட உள்ளது. அதன்படி, ''பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு'' என்ற படிப்பு வரும் கல்வியாண்டில் இருந்து சென்னை ஐ.ஐ.டி. அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.'' என்றார்.

இதுதொடர்பாக சுனில் வத்வானி கூறுகையில், ''என் வாழ்க்கையில் நான் பல ஆசீர்வாதங்களை பெற்றுள்ளேன். அதில் ஒரு பகுதியைதான் இங்கு நன்கொடையாக வழங்கியுள்ளேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக உருவெடுத்து வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் கல்வி, வாழ்க்கை, உற்பத்தி என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் கோலோச்சும். அந்த வகையில் மாணவ-மாணவிகள் அந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான், இந்த நன்கொடையை அதற்காக வழங்கி இருக்கிறேன்'' என்றார்.

1974-ம் ஆண்டில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் 50-வது ஆண்டினை நினைவுகூரும் வகையில் நடந்த ஒன்றிணையும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்