ஐ.ஜி. அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஐ.ஜி. அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-20 20:18 GMT

திருவெறும்பூர்:

திருவெறும்பூரை அடுத்த நத்தமாடிப்பட்டியில் உள்ள பொதுக்குளத்தில் மீன்பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அருள்தேவராஜ் என்பவருக்கும், கீழக்குறிச்சி கணேஷ்நகரை சேர்ந்த ஜோசப்(வயது 52) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் ஜோசப் மற்றும் அருள்தேவராஜ், ஞானசேகர், சிமியன், அபிஷேக், ரோஷன், ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஊர் மக்களிடம் விசாரணை நடத்தாமல் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், பெண் போலீசார் இன்றி வீடுகளுக்குள் புகுந்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீதும், பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்துக்கு நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் தற்காலிகமாக முற்றுகை போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்