''விஜயகாந்தை போல தன்னை நினைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்'' - பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை

தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணி இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்,

Update: 2023-07-24 09:54 GMT

சென்னை:

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி, கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணி இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தே.மு.தி.க. நிலைப்பாட்டை விஜயகாந்த் அறிவிப்பார். ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களை பெற்றது. தி.மு.க. 38 இடங்களை பெற்றது.

இத்தனை எம்.பி.க்கள் பெற்ற தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்துக்கு என்ன செய்தது என்பதுதான் தே.மு.தி.க.வின் கேள்வி. தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை இரண்டு கட்சிகளும் செய்து தரவில்லை.

காட்சிகளும் ஆட்சிகளும் தான் மாறுகிறது. மக்களின் நிலைமை மாறவில்லை. விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. தி.மு.க. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு தேர்தலுக்கு பிறகு ஒரு நிலைப்பாட்டில் உள்ளது.

மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தலைகுனிவு.

விஜயகாந்த் போல் யாரும் வர முடியாது. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. மக்களுக்கு அவரைப் போல் யாரும் சேவை செய்ய முடியாது.

விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வரவேற்கிறேன். அரசியல் வேறு, சினிமா வேறு... விஜயகாந்தைப் போல் விஜய் வர முடியாது.

கேப்டன் மாதிரி என்று நினைத்தால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அரசியலுக்கு வருவரா இல்லையா என்பது விஜய் தான் தெளிவுபடுத்தணும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்