48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு - அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்..!

தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Update: 2023-04-19 12:26 GMT

சென்னை,

தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார்.

வீடியோவில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் என சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில்,

தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வீடியோவை நீக்க வேண்டும்.

நஷ்டஈடாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்.

என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் திமுகவின் மூத்த வக்கீல் வில்சன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில்,

உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள். அதற்காக இந்த நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க தவறினால் அண்ணாமலை ரூ. 50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்