விளைநிலங்கள் கையகப்படுத்துவதை வாபஸ் பெறாவிடில் சட்டசபையை முற்றுகையிடுவோம்-இயக்குனர் கவுதமன் பேச்சு

மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசு திட்டத்தை கைவிடாவிடில் சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பேசினார்.

Update: 2023-09-15 18:13 GMT

செய்யாறு

மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசு திட்டத்தை கைவிடாவிடில் சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பேசினார்.

சிப்காட்

செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு, மேல்மா பகுதியை சுற்றியுள்ள 9 கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ேடாரின் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 76-வது நாளாக மேல்மா கூட்டுச்சாலை அருகே காத்திருப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு விவசாயி சந்திரன் தலைமை தாங்கினார். அருள், பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் கவுதமன் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்

அப்போது அவர் பேசுகையில், ''காத்திருப்பு போராட்டம் 100-வது நாளை அடைவதற்குள் தமிழக அரசு தரப்பில் இருந்து நல்ல பதிலை எதிர்ப்பார்க்கிறோம். தவறும் பட்சத்தில் சென்னை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தமிழ்பேரரசு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாய பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கடையடைப்பு

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதிகளில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்தனர். அதேப் போல் புரிசை, துறையூர், சவுந்தரியபுரம், தென்எலப்பாக்கம், நூத்தாம்பாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்