பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்
பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம், பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம்போக, மீதமுள்ள 2 ஆயிரத்து 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது.
பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விலை நிலங்களும், குடியிருப்புகளும் தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய ஏழை-எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துபேசி, அவர்களுடைய முழு ஒப்புதலை பெற்று, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடைய தேவையை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை என்றால் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும்..
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.