கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால்நிச்சயமாக வெற்றி பெறலாம்-கலெக்டர் பேச்சு

கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி கலெக்டர் முருகேஷ் பேசினார்.

Update: 2023-06-12 15:41 GMT

கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி கலெக்டர் முருகேஷ் பேசினார்.

பள்ளிகள் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, நகராட்சி நிதியுதவி, சுய நிதி, தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என சுமார் 2 ஆயிரத்து 542 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள திறப்பை முன்னிட்டு தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கரும்பலகைகள், மேஜைகள் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பள்ளி வகுப்புகள் தொடக்க நாளை முன்னிட்டு நேற்று காலை மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.

பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பன்னீர் தெளித்தும், பூங்கொத்து கொடுத்தும் ஆசிரியர், ஆசிரியைகள் வரவேற்றனர்.

விலையில்லா பாடப்புத்தக்கம்

பள்ளி திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 960 அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் நேற்று 1 லட்சத்து 33 ஆயிரத்து 733 மாணவ, மாணவிளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 6 முதல் பிளஸ் 2-ம் வரை படிக்கும் மாணவிகளுக்கு புத்தகங்களை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாலை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளியாக சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அதிகளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளி ஆசிரியர்களே காரணம். மாணவிகளாகிய நீங்கள் உங்களது வாழ்க்கையில் உயரிய நோக்கை அடைய வேண்டும் என்றால் லட்சியம் தேவை. லட்சத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் திட்டமிட்டு பாடங்களை கற்பித்து கல்வி முறையை பின்பற்ற வேண்டும்.

மேலும் குடும்ப சூழல்நிலை ஒருவரின் முன்னேற்றித்திற்கு முக்கிய காரணமாக அமையும். அதை கருத்தில் கொண்டு இன்றைய தலைமுறை கல்வி கற்கும் முறையில் இடை நிற்றலை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவிகள் இடை நிற்றலை தவிர்த்து உயர் கல்வி படிக்க வேண்டும். 6-ம் வகுப்பு பயிலும் போதே எந்த பணிக்கு செல்ல வேண்டும், சமுதாயத்தில் எந்த இடத்தை அடைய வேண்டும் என்று கருத்தில் கொண்டு தற்போதே அதற்கான அடித்தளமிட்டு கல்வி பயில வேண்டும். கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து அவர் பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளை பாராட்டி நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். இதனையொட்டி குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டி.வி.எம்.நேரு, பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் தமிழரசி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்