கிராமங்கள் முன்னேறினால் நாடு வளர்ச்சி அடையும்

கிராமங்கள் முன்னேறினால் நாடு வளர்ச்சி அடையும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.

Update: 2023-01-27 18:45 GMT

வேளாங்கண்ணி:

கிராமங்கள் முன்னேறினால் நாடு வளர்ச்சி அடையும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.

கிராம சபை கூட்டம்

கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியதாவது:-

மகாத்மா காந்தி ஒரு நாட்டின் வளர்ச்சியை கிராமப்புறங்களில் வளர்ச்சியை கொண்டு கணிக்கப்பட வேண்டும் என கூறினார். கிராமங்கள் முன்னேறினால் தான் அந்நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

போதை பொருள் இல்லாத ஊராட்சி

அதன் அடிப்படையில் கிராம சபை கூட்டம் வாயிலாக அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

ஊராட்சி பகுதிகளில் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக உருவாக்க வேண்டும். கிராம ஊராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு மூலமாக குழந்தைகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர்

பொதுமக்கள் குடிநீரை சுத்தமாக பாத்திரங்களில் மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்கள் இணையதள விளையாட்டுகள் விளையாடும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

உறுதிமொழி ஏற்பு

அதனை தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று உறுதிமொழிகளையும்,தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு ஆகிய விழிப்புணர்வு குறித்து உறுதிமொழிகளை கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் தணிக்கைத்துறை உதவி இயக்குனர் மோகனசுந்தரம், வேளாண்மை இணை இயக்குனர் ஜாகுலா அகண்ட ராவ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சவுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சுதா கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்தி ஆரோக்கியமேரி, வெற்றிச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்