சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் - பேரையூரில் கி.வீரமணி பேச்சு

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என பேரையூரில் கி.வீரமணி பேசினார்.

Update: 2023-02-23 21:41 GMT

பேரையூர், 

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என பேரையூரில் கி.வீரமணி பேசினார்.

பொதுக்கூட்டம்

மதுரை மாவட்டம் பேரையூரில் திராவிடர் கழகம் சார்பாக, சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- திராவிட கழகத்தில் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் கூட நின்றதில்லை. ஆனால் ஏன் இந்த பயணம் என்றால் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், நாடு ஜனநாயக நாடாக மாறப்போகிறதா?, பாசிச சர்வாதிகார நாடாக மாற போகிறதா? என்பதை வரும் சந்ததியினருக்கு புரிய வைக்கவே இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளோம்.

திராவிட மாடல் என்பது வருங்கால சந்ததிகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம். இதற்கு சொந்தக்காரர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாகவும் அறிவித்தார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் மிக அதிக அளவு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. மருத்துவ இடங்களும் அதிக அளவில் உள்ளது. இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சியாகும். திராவிட மாடல் ஆட்சி என்பது வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்கள், விதவைக்கு மறுமண திட்டம், அவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், இவை எல்லாம் திராவிட மாடல் ஆட்சியாகும். சேது சமுத்திர திட்டத்தை செயல்பட விடாமல் மத்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் பல தொழிற்சாலைகள் உருவாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படலாம். இத்திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டு வரும் தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு அதனை செயல்பட விடாமல் தடுத்து வருகிறது என்று பேசினார்.

அருப்புக்கோட்டை

அதேபோல் அருப்புக்கோட்டையில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினாா். அப்போது அவர் கூறியதாவது:-

சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு தான் என்பதை அறிவுறுத்தியவர் பெரியார். அறிஞர் அண்ணா திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பதனை உருவாக்கினார். பெண்கள் தற்போது மிகப்பெரிய அளவில் உரிமை பெற்றவர்களாக திகழ்கிறார்கள். காமராஜர் நமக்கு அளித்த கல்விப்பணி மகத்தானது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தியாவை பிரமித்து பார்க்கிறது. மத்தியில் பா.ஜ.க. பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி நடைபெறுகிறது. 70 சதவீத அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்களே. தமிழ்நாட்டில் தலைவர்களின் முயற்சியால் தற்போது சமூக நீதி வளர்ந்து வருகிறது.

பிரதமர் மோடி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்