மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் விருத்தாசலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
மணல்கொள்ளையை தடுக்காவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விருத்தாசலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
கடலூர் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் வரவேற்றார்.
இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், முன்னோடிகளை சந்தித்து பா.ம.க.வின் செயல் திட்டங்கள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும், நடைபெற உள்ள தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
தொடர்ந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருத்தாசலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இ்ப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் அம்பிகா சர்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும். கச்சிராயநத்தம் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுவதற்கு அழுத்தம் கொடுப்போம். இல்லையெனில் எங்களது கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம்.
நீர்வளம் நிறைந்த கடலூர் மாவட்டம், இன்று பாலைவனமாக மாறி வருகிறது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி. நிறுவனம். லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம் இப்பகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இதற்கான ஒரு தீர்வை மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக கொண்டு வர வேண்டும்.
மணல் கொள்ளை
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழக முதல்-அமைச்சரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட வேண்டும். மேலும் ஆற்றில் மணல் எடுப்பதை முழுமையாக தமிழக அரசு நிறுத்துவதுடன், மணல் கொள்ளையையும் தடுத்து நிறுத்த வேண்டும். மணல் குவாரிகளை மூட வேண்டும். இல்லையென்றால் பா.ம.க. சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்.
கடுமையான நடவடிக்கை
சமீப காலத்தில் ஒரு சில கட்சிகள், ஒரு சில அமைப்புகள், மக்களை மதம் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த, சாதி சார்ந்த பிரச்சினைகளை வைத்து பிரித்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு சரியான கலாசாரம் இல்லை.
அமைதியாக சகோதரர்களாக இவ்வளவு காலங்களாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலை தொடர வேண்டும். இது போன்று பெட்ரோல் குண்டுகள் வீசும் சம்பவங்கள் நடைபெறக்கூடாது. அதனை யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.