கல்வி உதவி தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்-கலெக்டர் கற்பகம் தகவல்
கல்வி உதவி தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, உடும்பியத்தில் செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் இந்த கல்வி ஆண்டிற்கு பிளஸ்-1 வகுப்பிற்கு பாடப்பிரிவுகளை மாணவ-மாணவிகள் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் உப்போடையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. கலந்தாய்விற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டம் கல்வித்துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் போட்டி தேர்வுகளிலும் மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மாதிரி பள்ளியில் 'நீட்' போன்ற 18-க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகளை தயார்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள் தினமும் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார். பின்னர் கலெக்டர் கற்பகம் கலந்தாய்வு கூட்டத்திற்கு வந்திருந்த மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி எதிர்கால திட்டம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.