கள்ளச்சாராயத்தை ஒழிக்காவிட்டால் பெண்களை திரட்டி அ.தி.மு.க. போராடும் - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்காவிட்டால் பெண்களை திரட்டி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-05-20 16:31 GMT

சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'ஆப்பரேஷன் கஞ்சா 2.0' நடத்தப்படுவது போல், இந்த விடியா அரசின் ஆட்சியில் இனி 'ஆப்பரேஷன் கள்ளச் சாராயம் 2.0' நடத்தப்படுமா? தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப் பேரவை விவாதங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளேன்.

குறிப்பாக, சட்டமன்றத்தில் உள்துறை மானியக் கோரிக்கையின் போது கஞ்சா, கள்ளச் சாராயம், திரவ வடிவ கஞ்சா, போதை ஊசிகள், மருந்துப் பொருட்கள் வடிவில் தமிழகமெங்கும் போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்தாடுவதை விரிவாக எடுத்துக் கூறினேன். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசியவை எதுவும் ஒளிபரப்பப்படவில்லை. நான் என்ன பேசினேன் என்பது முற்றிலுமாக தமிழக மக்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டது.

வெட்கக் கேடானது

போலி மதுபானங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சந்துக் கடைகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தாராளமாக விற்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் அரசில் சுதந்திரமாக செயல்பட்ட தமிழக காவல்துறையின் கைகள், ஆளும் தி.மு.க.வினரால் கட்டப்பட்டுள்ளதால், இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அதிகமாக பயணிக்கும் மெரினா கடற்கரை சாலையில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. போலீசாருக்கு தெரியாமல் இவ்வளவு புதைத்து வைக்க முடியாது. இதுதொடர்பாக, ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்சினையின் தீவிரத்தை மூடி மறைக்க போலீஸ்துறை முயல்கிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. சென்னை முதல் குமரி வரை கள்ளச்சாராய விற்பனை ஒரு சில போலீசார் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது.

போலீசார் கைகளை...

தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அப்பாவி மக்களின் கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று இந்த விடியா அரசை எச்சரிக்கிறேன்.

மக்களின் உயிரையும், உடமையையும் காக்க அ.தி.மு.க. எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். எனவே ஜெயலலிதா அரசின், ஆட்சியில் போலீஸ்துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் .கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்