பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன் - டி.ஆர்.பாலு பரபரப்பு பேட்டி

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன் என டி.ஆர்.பாலு எம்.பி பரபரப்பு பேட்டி அளித்தார்.

Update: 2023-05-02 04:27 GMT

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மண்டல குழு தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது:-

பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் என்னைப் பற்றி கூறிய அவதூறு செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. அவதூறுகள் குறித்து நான் அவருக்கு நோட்டீஸ் அளித்தேன். தற்போது வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 48 மணி நேரம் அவருக்கு கொடுத்தேன். அதுவும் முடிந்து விட்டது.

21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள். ஆனால் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. தேர்தலில் நிற்கும் போதே சொத்து கணக்குகள் அனைத்தும் கொடுத்திருக்கிறேன் அதை பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எது சொந்தம் எது சொந்தமில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

ஒரு வன்மம் நோக்கத்தோடு செய்திருக்கிறார். அதற்காக நான் வழக்கு தொடராமல் இருக்க முடியாது. வருகிற 8-ந் தேதி அவர் மீது வழக்கு தொடர போகிறேன். அதற்கு பிறகு சட்டபூர்வமாக சிவில் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்