நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உள்ளேன் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவீட்

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நாளை நீதிமன்றத்தில் தான் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-13 16:45 GMT

கோப்புப்படம்

சென்னை,

திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் நீதிமன்றம் வாயிலாக மக்களுக்குத் வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழக பா.ஜனதா சார்பாக திமுக பைல்ஸ்-இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை (14/07/2023) நேரில் ஆஜராக உள்ளேன்.

ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டு காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள்.

நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்குத் வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி" என்று அதில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்