அ.தி.மு.க., பா.ஜனதா பிளவுக்கு சமரசம் செய்ய நான் தூது செல்லவில்லை: ஜி.கே.வாசன் பேட்டி

அ.தி.மு.க., பா.ஜனதா பிளவுக்கு சமரசம் செய்ய நான் தூது செல்லவில்லை என கரூரில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2023-10-01 17:14 GMT

வயிற்றில் அடிக்கக் கூடாது

கரூருக்கு நேற்று வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகா அரசு டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறது. கர்நாடகா அரசு காவிரி ஆணையத்திற்கு மரியாதை கொடுக்கவில்லை. இதுவரை தமிழகத்திற்கு 50 சதவீதம் அளவு கூட தண்ணீரை வழங்கவில்லை. கர்நாடகா அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் தண்ணீர் தரக்கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், இதைப் பார்த்துக்கொண்டு தமிழக அரசு மவுனமாக இருக்கிறது. கர்நாடக முதல்-மந்திரியிடம் போனில் பேசும் தமிழக முதல்-அமைச்சர் டெல்லி சென்று தண்ணீர் கேட்டு இருக்கலாம். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது. விவசாயிகள் விவகாரத்தில் கவுரவம் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசுடன் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் நேரில் சென்று பேச வேண்டும்.

ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்

அ.தி.மு.க., பா.ஜனதா பிளவுக்கு சமரசம் செய்ய நான் தூது செல்லவில்லை. 2 கட்சிகளையும் நான் சமாதானம் செய்கிறேன் என்று வந்த தகவல் பொய். தேர்தல் நேரத்தில் நாட்டுநலன், கட்சி நலன் போன்றவை குறித்து ஆராய்ந்து பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இந்தியா கூட்டணிக்குள்ளே பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

தி.மு.க.வின் குறுகிய கால ஆட்சியில் அதிக கடன் பெற்றிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது, வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த நிலையில் மக்கள் உள்ளனர். விவசாயிகளுக்காக நாங்கள் எந்த நிலையிலும் போராடத் தயாராக இருக்கிறோம். ஆனால் இருமாநில மக்களுக்கும் இடையே பிரச்சினைகள் அதிகரித்து விடக்கூடாது, இப்பிரச்சினை சுமுகமாக முடியும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்