தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி...! " – டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக எனது பொறுப்பை நீட்டித்தாலும் மகிழ்ச்சி. அதேவேளையில் வேறு ஒருவரை தலைவராக நியமித்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என அழகிரி கூறினார்.
புதுடெல்லி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரை சந்தித்து பேசி உள்ளேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மாற்றம் தொடர்பான செய்தி வெளியான பின்னர் தான் டெல்லி வரவில்லை. டெல்லிக்கு வந்த பின்னர் தான் அதுபோன்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
பதவி கேட்டு இதுவரை காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர் பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது.
அகில இந்திய தலைவர்களுடனான இன்றைய சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்தோ, நிர்வாகிகள் நியமனம் குறித்தோ பேசவில்லை.
அரசியல் சூழல் குறித்து விவாதிக்கபட்டது. பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிராக எவ்வாறு கூட்டணியாக செயல்படுவது என்பது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக எனது பொறுப்பை நீட்டித்தாலும் மகிழ்ச்சி. அதேவேளையில் வேறு ஒருவரை தலைவராக நியமித்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.
எனக்கு எந்தவொரு பணி வழங்கப்பட்டாலும் அதனை நான் மகிழ்வுடன் செய்வேன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன்.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்பை விட அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம்.
அதேவேளையில் தேர்தலின்போது அதிகப்படியான தொகுதிகளை பெற்றுள்ளோமா என்பதை விட, கிடைத்த தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமா என்பது தான் முக்கியம். தமிழ்நாட்டில் ஆன்மீக நம்பிக்கை அதிகமாக இருந்தாலும், சனாதன சக்திகளுக்கு இடமில்லை என கூறினார்.