கணவன்- மனைவிக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறையில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி கணவன்- மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-08 18:30 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் வீட்ைட காலி செய்ய வலியுறுத்தி கணவன்- மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

வீடு விற்பனை

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் திருக்குளத்தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது42). இவருடைய மனைவி சுதா(35). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா மனைவி கங்கா என்பவரது பெயரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டை கடந்த 2017-ஆம் ஆண்டு கங்கா, மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் மெயின்ரோட்டில் வசித்து வரும் முன்னாள் ராணுவவீரரான பழனிவேல்(57) என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

முன்விரோதம்

வீட்டை வாங்கிய பழனிவேல் அதில் குடியிருந்துவரும் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரை வீட்டை விட்டு காலி செய்யும்படி வலிறுத்தினார். ஆனால் தமிழ்ச்செல்வன் தான் குடியிருக்கும் வீட்டை தானும் கங்காவிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்ததோடு வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச்செல்வனுக்கும், பழனிவேலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

அரிவாள் வெட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனிவேல் வீட்டை பூட்டு போட்டு பூட்டியுள்ளார். இதனால் தமிழ்ச்செல்வன் பூட்டை உடைத்து விட்டு அந்த வீட்டிலேயே தொடர்ந்து குடியிருந்து வந்தார். இதில் ஆத்திரமடைந்த பழனிவேல் தனது ஆதரவாளர்களுடன் சென்று தமிழ்ச்செல்வனையும், அவரது மனைவி சுதாவையும் அரிவாளால் வெட்டி வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்து வெளியே தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. மேலும் பழனிவேல் தான் வைத்திருந்த லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை காட்டி தமிழ்ச்செல்வனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வனும், சுதாவும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பழனிவேல் மனைவி வெண்ணிலா அவரது உறவினர் அருணாசலம் மற்றும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்