கணவன்- மனைவி ரூ.5 கோடி மோசடி

ஓசூரில் ஏலச்சீட்டு நடத்தி கணவன்- மனைவி ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக அவர்களது வீட்டை பணம் கட்டி ஏமாந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-11 19:00 GMT

ஓசூர்:-

ஓசூரில் ஏலச்சீட்டு நடத்தி கணவன்- மனைவி ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக அவர்களது வீட்டை பணம் கட்டி ஏமாந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கணவன்- மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் கே.சி.சி.நகர் பகுதியை சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இதுதவிர கடனாகவும் லட்சக்கணக்கில் பணம் பெற்று அதற்கு வட்டியும் செலுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் சீட்டு பணம் செலுத்தியவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக பணம் திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ரூ.5 கோடி மோசடி

அந்த வகையில் கணவன்- மனைவி இருவரும் ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சீட்டு பணம் கொடுத்து ஏமாந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அந்த தம்பதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம், போலீசில் புகார் அளியுங்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். உடனே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விசாரணை

தொடர்ந்து பண மோசடி செய்ததாக கூறப்பட்ட கணவன்- மனைவி இருவரையும் விசாரணைக்காக அட்கோ போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்