கும்மிடிப்பூண்டி அருகே கடையில் நூதன முறையில் நகை திருடிய வழக்கில் கணவன்- மனைவி கைது
கும்மிடிப்பூண்டி அருகே கடையில் நூதன முறையில் நகை திருடிய வழக்கில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் கல்லூர் ராம் (வயது 55). கடந்த 2-ந் தேதி இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வந்தார்.
3 பவுன் தங்க சங்கிலியை வாங்க வந்ததாக கூறி, கடையில் இருந்த ஒரு சில மாடல்களிலான தங்க சங்கிலிகளை அவர் எடுத்து பார்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நகை வேண்டாம் என தெரிவித்த அந்த பெண், 3 பவுன் தங்க நகையை ஊழியர்கள் அசந்த நேரத்தில் திருடி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று விட்டார். நகை வாங்க வந்த பெண் கடையை விட்டு வெளியே சென்ற பிறகு தான், கடையில் இருந்து 3 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது.
இந்த குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சியின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில், நகை கடையில் நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் சித்திரை காடு கிராமத்தை சேர்ந்த பெண் பிரியா என்கிற பிரியங்கா (34) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ராமச்சந்திரன் (39) ஆகிய 2 பேரை நேற்று சென்னை வளசரவாக்கத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.