நகை-பணம் திருடிய கணவன்-மனைவி கைது

சோளிங்கர் அருகே பகலில் தக்காளி வியாபாரம் செய்வது போல் நடித்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை- பணம் திருடிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-13 17:18 GMT

வாகன சோதனை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜனகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. கடந்த மாதம் 28-ந்் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து சுப்பிரமணி சோளிங்கர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் பாராஞ்சி கூட்ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டிவந்தது பாராஞ்சி காலனியை சேர்ந்த சுதன் (வயது 25) என்பது தெரிய வந்தது. அவருடன் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் (21) உடன் இருந்தார்.

கணவன்- மனைவி கைது

கணவன்- மனைவி இருவரும் பகல் நேரங்களில் சரக்கு ஆட்டோவில் சென்று தக்காளி வியாபாரம் செய்வதுபோல் பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் திருடி செல்வது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 பவுன் நகை, ஒரு மோட்டார்சைக்கிள், அவர்கள் ஓட்டிவந்த சரக்கு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்