மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத நூற்றுக் கணக்கானோர் ஒரே நேரத்தில் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.

Update: 2023-09-19 18:50 GMT

மகளிர் உரிமைத்தொகை

குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் கடந்த 15-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு பணம் வரவில்லை.

விடுபட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் எந்த காரணத்துக்காக விடுபட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேல் முறையீடு செய்தால் விசாரணை நடத்தி மகளிர் உரிமைத்தொகை பணம் வங்கி கணக்கில் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கானோர்

இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் பணம் வராதவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் சென்று பொதுமக்களை ஒழுங்குபடுத்தினர்.

பொதுமக்கள் தகவல் தெரிந்து கொள்ள குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் 8 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டது. அதில் மகளிர் உரிமைத் தொகை வராதவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்போது சர்வர் வேலை செய்யாததால் தனித்தனியாக ரிஜிஸ்டர் புத்தகத்தில் பயனாளிகளின் போன் நம்பர், ஆதார் எண், ரேஷன் அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்தனர்.

இப்பணி மாலை வரை நடைபெற்றது. முதல் நாளிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். முன்னதாக தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டவர்களை மீண்டும் பதிவு செய்யும் பணிகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் சுபிச்சந்தர், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்