ஜெகதாபி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்

ஜெகதாபி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-17 19:30 GMT

கரூர் மாவட்டம் ஜெகதாபி கிராமத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். இம்முகாமில் மாவட்ட கலெக்டர் பேசும்போது, தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெற செய்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைகோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 341 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 சிமெண்டு சாலை அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை வழங்கி உள்ளோம். இங்கு மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் பேருக்கு மேல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த பகுதியில் 57 மாணவ-மாணவிகள் பள்ளியில் இருந்து இடை நின்று உள்ளார்கள். அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த முகாமில் வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை ஆகிய துறைகள் சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், தனித்துணை கலெக்டர் சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரூபினா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்