எருமப்பட்டி
எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சி தூசூர் கிராமத்தில் மிகப்பெரிய தூசூர் ஏரிஉள்ளது. இதன் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நீர் பாசனவசதி பெறுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்வதுடன் நிலத்தடி நீர் உயர முக்கிய பங்காற்றுகிறது. இந்தநிலையில் இந்த ஏரியில் நாமக்கல் நகராட்சியில் இருந்து கழிவுநீர் கலப்பதால் மிகவும் துர்நாற்றம் வீசி நிலத்தடி நீரும் மாசடைகிறது. இதை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட உதவி செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். எருமப்பட்டி முன்னாள் சேர்மன் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆதி நாராயணன், மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட உதவி செயலாளர் ஜோதி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ராஜூ உள்ளிட்ட விவசாய சங்க துணை ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.