காதலியின் அழகில் மயங்கி 550 பவுன் நகையை தொழில் அதிபர் பறிகொடுத்தது எப்படி? சுவாரசிய தகவல்கள்

காதலியின் அழகில் மயங்கி 550 பவுன் நகையை தொழில் அதிபர் பறிகொடுத்தது எப்படி? என்பது தொடர்பாக சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

Update: 2022-08-09 22:59 GMT

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவருடைய மகன்கள் சேகர் (வயது 41), ராஜேஷ் (37). இருவருக்கும் திருமணமாகி தாயுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லியில் இனிப்பு கடை நடத்தியும், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சேகரின் தாய் தமிழ்ச்செல்வி புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் சேகர் வீட்டில் இருந்த 550 பவுன் நகைகளை திருடி அவரது கள்ளக்காதலியிடம் கொடுத்து விட்டதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் சேகர் மற்றும் அவரது காதலி சுவாதி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் காதலியிடம் தொழில் அதிபர் நகை-பணத்தை பறிகொடுத்தது எப்படி? என பல சுவாரசியமான தகவல்கள் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

பெண்களுடன் உல்லாசம்

தொழில் அதிபர் சேகரின் மனைவிக்கு இருதய பிரச்சினை இருப்பதால் அவர், வேறு சில பெண்களுடன் பணம் கொடுத்து உல்லாசமாக இருப்பதற்காக தரகரை அணுகினார். அப்படி அவருக்கு பழக்கமானவர்தான் 22 வயதான சுவாதி. இவர் மாடலிங் செய்து வருவதுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

ஒரு ஆணுடன் இரவில் தங்குவதற்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளார். சேகர் ஆசைப்படும்போதெல்லாம் சுவாதியை போரூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து விட்டு ரூ.15 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தி உள்ளார்.

சுவாதியின் அழகில் மயங்கிய சேகர், அவரை நிரந்தரமாக தன்னுடன் வைத்து கொள்ள ஆசைப்பட்டார். இதனால் அடிக்கடி சுவாதியை உல்லாசத்துக்கு அழைத்து பணம் கொடுத்து வந்தார். அவரிடம் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த சுவாதி, தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து, திருமணமாகவில்லை என்று கூறி சேகருடன் கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

சுற்றுலா தலங்களுக்கு...

இருவரும் அடிக்கடி கோவா, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை எடுத்து சென்று காதலி சுவாதியிடம் கொடுத்துள்ளார். இதையறிந்த சேகரின் தாய், சுவாதியிடம் சென்று அந்த 200 பவுன் நகைகளை மீட்டு வந்தார்.

அதன்பிறகும் சுவாதியுடனான தொடர்பை கைவிடாத சேகர், தனது மனைவி, தாய் என குடும்பத்தினரின் நகைகளை திருடி காதலிக்கு பரிசளித்து உள்ளார். சுவாதிக்கு இதுவரை சேகர் 550 பவுன் நகைகளையும், ரூ.30 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் சுவாதியுடன் வெளியே சென்று வருவதற்காக கார் ஒன்றையும் வாங்கி கொடுத்தது தெரிய வந்தது.

சேகரிடம் அதிக அளவில் பணம் இருந்ததாலும், கேட்கும்போது எல்லாம் பணம், நகையை கொடுத்ததாலும் சேகரை ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் இருந்து நகை, பணத்தை சுவாதி கறந்துள்ளார். மேலும் சொந்தமாக வீடு வாங்க உள்ளதாகவும், அதற்கு ரூ.70 லட்சம் குறைவாக உள்ளதாகவும் சேகரிடம் கூறினார். அந்த பணத்தை கொடுக்கவும் சேகர் ஏற்பாடு செய்து வந்தார்.

மிரட்டி வாங்க முடிவு

சேகர் அளித்த பணம், நகை ஆகியவற்றை வைத்து கொண்டு சுவாதி தனது ஆண் நண்பர்களுடன் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார். சேகர், காதலியுடன் தாய்லாந்து செல்வதற்காக பாஸ்போர்ட், சுற்றுலா விசா ஆகியவற்றை எடுத்து இருந்தார். ஆனால் அதற்குள் இருவரும் போலீசில் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் தனது காதலியுடன் சேகர் அதிக அளவில் நகை, பணம் கொடுத்து இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் சுவாதியிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர், சேகர் தன்னிடம் நகை, பணம் எதுவும் கொடுக்கவில்லை என கூறிவிட்டார். இதனால் சுவாதியை அவரது வக்கீல்கள் மூலம் வரவழைத்து அவரை மிரட்டி நகையை வாங்க முடிவு செய்தனர். ஆனால் அந்த திட்டம் பலிக்காததால் அதன்பிறகே சேகரின் தாய், போலீசில் புகார் செய்து உள்ளார்.

இதனால் சேகரின் தாய் மற்றும் அவரது தம்பி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்து உள்ளனர். அதேநேரத்தில் சுவாதி, சேகர் தன்னிடம் கொடுத்த நகைகளை எல்லாம் அவரது குடும்பத்தினரே தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி எடுத்துச்சென்று விட்டதாக போலீசில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்