நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
சென்னை,
மக்களுக்கான திட்டங்களின் பலன்கள் அவர்களுக்கு போய் சேர்கிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில், "நீங்கள் நலமா?" என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில், "நீங்கள் நலமா" என்று கேட்கும் மு.க.ஸ்டாலின் அவர்களே, நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!
எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
"எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்! விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில்"
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.