கியாஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கொதிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை நிர்ணயித்து வருகின்றன1. அந்தவகையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் 1,068 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்ட ஒரு சிலிண்டர் விலை, 1,118 ரூபாய் 50 காசுக்கு இனி விற்பனை செய்யப்பட உள்ளது.

Update: 2023-03-01 18:45 GMT

இல்லத்தரசிகள் கொதிப்பு

இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.351 அதிகரித்து, இனி ரூ.2 ஆயிரத்து 268-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனால் டீக்கடை, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் பலகாரங்கள், உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. சமையல் சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கொதித்து போய் இருக்கின்றனர்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:-

கூடுதல் சுமை ஏற்படும்

பெரம்பலூர் புறநகர் எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த தன்யா:- சில ஆண்டுக்கு முன்பு எரிபொருள் விலையை மத்திய அரசு நிர்ணயித்து பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சீராக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்தபிறகு அதன் விலை தாறுமாறாக ஏறிவிட்டன. சிலிண்டர் விலையை மத்திய அரசு மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை தவிர்க்க முடியும். கச்சா எண்ணெய் விலை வளைகுடா நாடுகளில் சீராக உள்ளது. இந்த நிலையில் சிலிண்டர் மற்றும் வாகன எரிபொருள் விலையை உயர்த்துவது தனியார் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும். பொதுமக்களுக்கு விலை ஏற்றமே மிஞ்சும். எங்களது குடும்பத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 6 சிலிண்டர் முதல் 8 சிலிண்டர் வரை பயன்படுத்தி வருகிறோம். 2002-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.1,108 இருந்தது. தற்போது ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு காரணமாக அன்றாட பொதுமக்களுக்கு குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் சுமை ஏற்படும். எனவே தற்போது சுள்ளிகளை சேகரித்து வந்து அடுப்பு எரிக்க பயன்படுத்தி வருகிறோம்.

மானியத்தை நிறுத்தும் நடவடிக்கை

பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமிபிரபா:- வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.955-க்கு ஆன்லைனில் செலுத்தியவுடன் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிலிண்டர் விலை ரூ.1,005-க்கும், ஏப்ரல், மே மாதங்களில் ரூ.1,055-க்கும், ஜூலை மாதம் ரூ.1,108-க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 4 முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கியாஸ் சிலிண்டர் மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்தை முற்றிலும் நிறுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையாகவே தெரிகிறது. கியாஸ் சிலிண்டர் பயன்பாடு பெண்களுக்கு பழகிவிட்டதாலும், புகையின்மையாலும் மீண்டும் கரி அடுப்பையோ, விறகு அடுப்பையோ பயன்படுத்த வழியில்லை. இல்லத்தரசிகள், நடுத்தர மக்களின் நலன்கருதி மத்திய அரசு கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்.

விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் வேணுகோபால்:- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நேற்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது டீக்கடை உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டீக்கடையில் டீ, காபி மற்றும் எண்ணெய் பலகாரங்கள் உள்ளிட்டவையின் விலை உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே டீக்கடையில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்துள்ளது. இப்படி சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே போனால் டீக்கடை வைத்து நடத்தும் உரிமையாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். இந்த விலை உயர்வு எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இருக்கிறது. சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்