கனடாவில் நடைபெறும் காமன்வெல்த் உயிர் காக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு ஓசூர் நடுவர் தேர்வு

கனடாவில் நடைபெறும் காமன்வெல்த் உயிர் காக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு ஓசூர் நடுவர் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2023-09-11 18:45 GMT

ஓசூர்:

கனடா நாட்டில் டொரண்டோ நகரில் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் காமன்வெல்த் உயிர் காக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் தத்தளிப்பவர்கள், சிக்கி தவிப்பவர்களை எவ்வாறு விரைவாக மீட்பது? கடற்கரை மணலில் மனிதர்களை தூக்கி கொண்டு விரைவாக ஓடி எவ்வாறு மீட்பது? போன்ற உயிர் காக்கும் விளையாட்டுக்கள் நடைபெறும். இந்த விளையாட்டுகளில் பங்கு பெற்று அதிக புள்ளிகளை பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் கிடைக்கும். இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, கனடா உள்பட உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து, 21 உயிர் காக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ள வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிகளில் நடுவராக ஓசூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டியன் என்பவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்திய நாட்டின் இயற்கை பேரிடர் உயிர் காப்பு பணி பெடரேசனின் தேசிய தலைவராக உள்ளார். ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தன்னார்வலர் நடுவராக பங்கேற்று உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உயிர் காக்கும் விளையாட்டு போட்டிகளில் நடுவராகவும், கடந்த 2022-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போட்டிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்