மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2022-09-21 20:01 GMT

விருதுநகர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வேகமாக பரவும் காய்ச்சல்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதிகளில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் பரவலாக நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மாவட்டத்தில் கிழக்கு பகுதியிலுள்ள கிராமப்புறங்களிலும் அனைத்து நகர் பகுதிகளிலும் காய்ச்சல் நோய் பரவலாக பாதித்துள்ளது. "ப்ளூ" காய்ச்சல் என கூறப்படும் இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் இருமல், உடல் வலி மற்றும் பிற அறிகுறிகளை வெளிப்படுத்தும் தொற்று வைரஸ்களால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

பெரிய பாதிப்பு

இந்த பாதிப்பு ஏற்படுத்துவதற்கு தட்பவெப்ப நிலை மாற்றமே காரணம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் செல்வோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் அரவிந்த் பாபு தெரிவித்தார்.

எனினும் உடனடியாக மருத்துவரை சந்திக்கும் பட்சத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

விருதுநகர் மாவட்ட முழுவதும் பரவலாக ப்ளூ காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதால் அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், புற நோயாளி சிகிச்சை பிரிவுகளிலும் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீண்ட வரிசை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நீண்ட வரிசையில் சிகிச்சைக்கு வருவோர் காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்கான இருக்கை வசதிகள் செய்யப்படாததால் நோய் பாதிப்பால் வந்தவர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்ட முழுவதும் பரவலாக காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதற்காக சிறப்பு சிகிச்சை முகாமினை அதிகப்படுத்தி உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்வதோடு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்