பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன.
பவானி
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன.
ரேக்ளா பந்தயம்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி- குமாரபாளையம் நண்பர்கள் சார்பில் ரேக்ளா குதிரை பந்தயம் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஜம்பை-ஆப்பக்கூடல் சாலையில் நேற்று நடைபெற்றது. பவானி தொகுதி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீறிப்பாய்ந்த குதிரைகள்
கொடி அசைக்கப்பட்டதும் குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை ரோட்டில் இருபுறமும் நின்றுகொண்டு இருந்த பொதுமக்கள் கைகளை தட்டி உற்சாகமாக கண்டு ரசித்தனர். உள்ளூர் குதிரைகளுக்கான போட்டி முதலில் நடந்தது. பவானியில் இருந்து ஒரிச்சேரி வரை 7 கிலோ மீட்டர் தூரம் பந்தயம் நடந்தது. இப்போட்டியில் முதல் பரிசான 12 ஆயிரத்து ஒரு ரூபாயை எழில் பவானி ஜாக்கியும், 2-வது பரிசான 10 ஆயிரத்து ஒரு ரூபாயை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வெங்கடும், 3-வது பரிசான 6 ஆயிரத்து ஒரு ரூபாயை பவானி மேஸ்திரி சதீஷ் குதிரையும் பிடித்தது.
அதனை தொடர்ந்து புதிய குதிரைகளுக்கான போட்டி நடந்தது. இதில் கோவை தினேஷ் முதல் பரிசான ரூ.12 ஆயிரத்து 1-யும், சேலம் செந்தில் 2-வது பரிசான ரூ.10 ஆயிரத்து 1-யும், ராசிபுரம் பால்ராஜ் 3-வது பரிசான ரூ.6 ஆயிரத்து 1-யும் பிடித்து பரிசுகளை வென்றார்கள்.
ஏ.வி.எம். குரூப் ஆத்தூர்
தளவாய்பேட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற 43 இன்ச் குதிரைகளுக்கான போட்டியில் ஏ.வி.எம். குரூப் ஆத்தூர் முதல் பரிசான ரூ.15 ஆயிரத்து 1-யும், பூண்டி கலைவேந்தன் 2-வது பரிசான ரூ.12 ஆயிரத்து 1-யும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சோலை என்ற குதிரை 3-வது பரிசான ரூ.8 ஆயிரத்து 1-யும் கைப்பற்றியது.
அதேபோல் 43 இன்ச் இரண்டாவது செட்டுக்கான போட்டியில் கோவை டாலிகிங் முதல் பரிசான ரூ.15 ஆயிரத்து 1-யும், நம்பி உதயசூரியன் 2-வது பரிசான ரூ.12 ஆயிரத்து 1-யும், கோபி அண்ணாமலை 3-வது பரிசான ரூ.8 ஆயிரத்து 1-யும் பெற்றது.
அன்னூர் மூர்த்தி
45 இன்ச் அளவிலான குதிரைகளுக்கு, போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து விஜயா காலனி வரை பந்தயம் நடந்தது. இதில் அன்னூர் மூர்த்தி முதல் பரிசான ரூ.20 ஆயிரத்து 1-யும், ஈரோடு சரவணன் 2-வது பரிசான ரூ.15 ஆயிரத்து 1-யும், நாகூர் பாய் 3-வது பரிசான ரூ.10 ஆயிரத்து 1-யும் பெற்றார்கள்.
கடைசியாக பெரிய குதிரைகளுக்கு பவானியில் இருந்து ஆப்பக்கூடல் நால்ரோடு வரை 10 கி.மீ. தூரம் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை மயில்கள் எக்ஸ்பிரஸ் முதல் பரிசான ரூ.35 ஆயிரத்து 1-யும், பேராபூரணி ருத்ரா அப்பாஸ் என்ற ஜாக்கி 2-வது பரிசான ரூ.25 ஆயிரத்து 1-யும், சென்னை திருவல்லிக்கேணி ஜம்போ குதிரையின் ஜாக்கி 3-வது பரிசான ரூ.15 ஆயிரத்து 1-யும் பெற்றது.
பரிசு
மொத்தம் நடந்த 6 சுற்று போட்டியில் வெற்றி பெற்ற ஜாக்கிகளுக்கு பவானி குமாரபாளையம் நண்பர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பந்தய தொடக்க விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி குமராபாளையம் குதிரை வண்டி ஓட்டுநர் சங்க தலைவர் வெங்கிடு ஆகியோர் கலந்து கொண்டனர்.