புனித அதிசய அன்னை ஆலய தேர்பவனி
ஆலங்குடியில் புனித அதிசய அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.
ஆலங்குடியில் உள்ள புனித அதிசய அன்னை ஆலய தேர்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, எஸ்.மேலப்பட்டி, அய்யங்காடு, நெம்மக்கோட்டை, வம்பன் காலனி, குளவாய்ப்பட்டி, வாழைக்கொல்லை, வண்ணாச்சிக்கொல்லை, ஆலங்குடி, கும்மங்குளம் மக்கள் ஒன்று கூடி நாள்தோறும் நவநாள் திருப்பலியை நடத்தினர். நேற்று இரவு அருட்தந்தையர் ஆர்.கே. அடிகளார் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவ மாதாவை எழுந்தருள செய்து நகரின் முக்கிய வீதிகளில் வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். அதன்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவிழா கூட்டுப்பாடல் பூஜையில் சிறுவர்-சிறுமிகளுக்கு திவ்ய நற்கருணை வழங்கப்பட உள்ளது.