ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைக்கிராம மக்கள்
கொடைக்கானல் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை மலைக்கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு வசிக்கிற மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் மன்னவனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மலைக்கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி செயலர் வீரமணி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கும் பணி நடப்பதாகவும், அதன்பிறகு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.