வேலைவாய்ப்பு பெற உயர் கல்வி அவசியம்

அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற உயர் கல்வி அவசியம் என பழங்குடியின மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை கூறினார்.

Update: 2023-03-12 18:45 GMT

நாகர்கோவில்:

அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற உயர் கல்வி அவசியம் என பழங்குடியின மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை கூறினார்.

பழங்குடியின குழந்தைகள் மேளா

பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்மூடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் காணி பழங்குடி இன குழந்தைகள் மேளா நம்பிக்கை நட்சத்திரம் என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பள்ளி கல்வி, உயர் கல்வி, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு வழங்குவது உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. காணி பழங்குடியின மாணவர்கள் தொடக்க கல்வி அல்லது நடுநிலைக்கல்வி முடிந்ததும் உயர்கல்விக்கு செல்லாமல் இருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு பெற முடியும்

உயர்கல்விக்கு சென்றால் தான் அரசு அல்லது தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற முடியும். காணி மலைவாழ் மக்களிடையே பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கிறது. அவற்றை வெளி உலகிற்கு கொண்டுவர நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக, மாணவர்கள் கல்வி மட்டுமல்லாது நடனம், பாட்டு, விளையாட்டு போன்ற பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கல்வியோடு சேர்ந்து பல்வேறு தனித்திறமைகளை கொண்டிருந்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறலாம். காணி பழங்குடியினத்தை சார்ந்த பலர் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களை முன்னுதாரணமாக கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டத்தின் வாயிலாக சுய உதவிக்குழுக்கள் மூலம் பல்வேறு கடனுதவிகளும், பல துறைகள் மூலம் தையல் எந்திர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

போதை இல்லாத குமரி

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதை இல்லாத கன்னியாகுமரி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடையே போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ், சமூக ஆர்வலர் சுரேஷ் காணி மற்றும் அரசு அதிகாரிகள், மாணவா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்