தருமபுரி: மஞ்சவாடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - பல கி.மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சேலம் - திருவண்ணாமலை பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-19 13:55 GMT

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சப்பாடி கிராமத்தில் தரைப்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண்சாலை அமைக்கப்பட்டு மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஞ்சவாடி பகுதியில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக மண்சாலையில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள், மண் சாலையை கடந்து போக முடியாமல் தத்தளித்து வருகின்றன.

இதன் காரணமாக சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சேலம் - திருவண்ணாமலை பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், பயணிகளும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து பாதிப்பை சரி செய்யும் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் நேற்றும் இந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு வழிச்சாலை பணிகளை துரிதமாக மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்று வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்