சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை: மரங்கள், பேனர்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்கள் மரங்கள், பேனர்கள் விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Update: 2023-05-26 08:57 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று காலை முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென பலத்த மழை பெய்தது.

தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, முடிச்சூர், பல்லாவரம், அனகாபுத்தூர் உள்பட புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதியில் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பலத்த காற்றில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பில் வணிக வளாகம் ஒன்றின் மாடியில் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றின் வேகத்தில் கிழிந்து சாலையோரம் இருந்த உயரழுத்த மின்கம்பத்தில் விழுந்தது.

இதனால் குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மாலை 4 மணிக்கு விழுந்த பேனரை இரவு வெகுநேரம் ஆகியும் அகற்றுவதற்கு மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை அருகே பெரிய இரும்பு பைபால் அமைக்கப்பட்டிருந்த 25 அடி உயரம் கொண்ட ராட்சத பேனர் திடீரென முறிந்து அருகே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. அருகே சென்று கொண்டிருந்த மின்சார வயர் மீதும் பேனர் விழுந்ததில் மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காலையில் இருந்து கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்