இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை

வேலூரில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது

Update: 2022-10-18 16:22 GMT

வேலூரில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இடி, மின்னலுடன் பலத்த மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை/fud வெயிலின் தாக்கம் காணப்பட்டது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 6 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிதுநேரம் மிதமாக மழை பெய்தது. அதன்பின்னர் திடீரென மழையின் வேகம் அதிகரித்தது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது பலத்த மழை கொட்டி தீர்த்தது.

அதன்பின்னர் சாரல் மழை பெய்தது. பலத்த மழையினால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய பலர் மழையில் நனைந்தபடியும், பொதுமக்கள் சிலர் குடைபிடித்தப்படி சென்றதையும் காணமுடிந்தது.

கால்வாய் பள்ளத்தில் சிக்கிய கார்

வேலூர் சங்கரன்பாளையம் வடிவேல்நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த இடத்தில் எவ்வித அறிவிப்பும், கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட இடத்தை சுற்றி எவ்வித தடுப்புகளும் அமைக்கப்படவில்லை. அதனால் அந்த வழியாக வந்த கார் ஒன்று மழைநீர் தேங்கி நின்ற பள்ளத்தில் சிக்கி மாட்டி கொண்டது. இதில், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

கழிவுநீர் கால்வாய், பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும். அதனை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காட்பாடி

காட்பாடி பகுதியில் மாலை 6.45 மணிக்கு மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.

காட்பாடி, கழிஞ்சூர், வஞ்சூர், சேனூர், விருதம்பட்டு, காந்திநகர், பிரம்மபுரம் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது. மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்