சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை..!

சென்னை ஆலந்தூரில் அதிகப்பட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-03 01:16 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதேபோல புறநகர் பகுதிகளான ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், இன்றும் பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம், மின்சாரம், காவல், வடிகால் வாரியம் உள்ளிட்டதுறை ஊழியர்களும் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்