ஆண்டிப்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; மரம் சாய்ந்து கார் சேதம்

ஆண்டிப்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மரம் சாய்ந்து கார் சேதமடைந்தது.

Update: 2023-05-29 21:00 GMT

ஆண்டிப்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மரம் சாய்ந்து கார் சேதமடைந்தது.

சூறாவளி காற்று

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் மதியம் 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது. மேலும் பலத்த காற்றும் வீசியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்து, சூறாவளி காற்றாக வீசியது. இதனால் ஆண்டிப்பட்டி பகுதியில் பல்வேறு மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

குறிப்பாக ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டியில், திருவள்ளுவர் காலனி பகுதியில் இருந்த பழமையான அரசமரம் ஒன்று பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தது. அப்போது அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மரம் விழுந்தது. இதில் அந்த கார் முற்றிலும் சேதமடைந்தது. அந்த நேரத்தில் காருக்குள்ளும், காரின் அருகிலும் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின்கம்பங்கள் முறிந்தன

மேலும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள சில வீடுகளின் கதவுகள் மற்றும் மேற்கூரை தகரங்களும் காற்றில் பறந்து விழுந்தன. இதுதவிர சக்கம்பட்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சக்கம்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சக்கம்பட்டி பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின்பாதையை சீரமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சூறாவளி காற்று மற்றும் மழையால் சக்கம்பட்டி குடியிருப்பு பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. இதனால் ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், தீயணைப்பு படையினர் சேர்ந்து மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

2-வது சம்பவம்

ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணை பகுதியில் கடந்த 21-ந்தேதி இதேபோன்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது வைகை அணை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் 2 கார்களும் அப்பளம்போல் நொறுங்கியது. அதேபோல் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. அதைத்தொடர்ந்து ஒருவாரத்தில் 2-வது சம்பவமாக சக்கம்பட்டியில் நேற்று மரம் சாய்ந்து கார் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சக்கம்பட்டியில் சூறாவளி காற்று மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு இடவசதி, பாய், போர்வை, தலையணை, உணவு மற்றும் நிதிஉதவிகளை வழங்கினர். தி.மு.க. நிர்வாகிகள் சிலரும் உதவி செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்